Get Mystery Box with random crypto!

ரூ 2028 கோடி ரேஷன் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

ரூ 2028 கோடி ரேஷன் ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார்

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் (TNCSC) ரேஷன் கடைகள் பொருட்களான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு கொள்முதலில் கிட்டத்தட்ட ரூ 2028 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பகத்திற்கு புகார் அளித்துள்ளது. இதற்கு இந்த துறை அமைச்சர் காமராஜ், முன்னாள் இயக்குநர்கள் சுதா தேவி IAS உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் குமாரசாமியின் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டரின் ஊழியர்களின் மீதும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளோம். உடனடியாக இவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடந்த வேண்டும்.

1. கடந்த 6 ஆண்டுகளில் கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறும் வண்ணமும் இத்தனை வருடங்கள் ரேஷன் துறையான TNCSC ற்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வந்த நிறுவனங்கள் பங்கெடுக்க முடியாத வண்ணமும், டெண்டரில் பங்கெடுப்பதற்கான தகுதி விதிகள், சர்க்கரையில் 2019 லும் பாமாயிலில் 2017 லும் பருப்பில் 2015 லும் மாற்றப்பட்டன.

2. கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் கிறிஸ்டி போர்வையில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறச்செய்து, அதுவரை சப்ளை செய்த நிறுவனங்கள் பங்குபெற முடியாத வகையில் நிதி தகுதி(turnover), அனுபவம் போன்றவை மாற்றப்பட்டு, டெண்டர் சட்டத்தின் முக்கிய இலக்கான ஆரோக்கியமான போட்டி இல்லாமல் செய்யப்பட்டது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டர் கிரிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முகமாகவே இதில் பங்கெடுத்தனர். அவர்கள் இப்பொருட்களை மீண்டும் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சப்ளை செய்ய கொடுத்தனர்.

3. மிக முக்கியமாக, கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்கெடுக்கும் முன் வரை மற்ற நிறுவனங்களிடம் இருந்து கிட்டத்தட்ட சந்தை மதிப்பிற்கு பொருட்கள் வாங்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்து டெண்டர்கள் எடுக்க ஆரம்பித்ததில் இருந்து சந்தை மதிப்பை விட மிகவும் அதிக விலை கொடுத்து சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு வாங்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய அளவில் நமது வரிப்பண இழப்பும், இதனால் கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்ட விரோதமாக பெரும் லாபத்தையும் ஈட்டினர்.

4. கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த பொருட்கள் சப்ளை செய்யவில்லை. அவர்கள் அந்த வேலையை ஏற்கனவே போட்டி போட்டுக்கொண்டிருந்த நிறுவனங்களுக்கு சந்தை விலைக்கு கொடுத்து விட்டனர். Godown வரை அவர்கள் தான் போய் இறக்குகிறார்கள். கிறிஸ்டி ஃப்ரைட்கிராம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெறும் பில் போடும் வேலையை மட்டும் செய்து, கிலோவிற்கு ரூ 10 முதல் 30 வரை ஊழல் செய்துள்ளார்கள்.

5. உதாரணத்திற்கு கனடியன் மஞ்சள் பருப்பு / துவரம் பருப்பு டெண்டர்களில் டெண்டர் விதிகள் 2014 மற்றும் 2015ல் கிறிஸ்டி நிறுவன சார்பில் மாற்றியது ரேஷன் துறை. 20000 மெட்ரிக் டன் கனடியன் மஞ்சள் பருப்பு கொள்முதல் விதிகளில் கிறிஸ்டி நிறுவனத்தை உள்ளே கொண்டுவருவதற்காக பருப்பு சப்ளை செய்த அனுபவம் வேண்டும் என்பதை மாற்றி ஏதாவது ஒரு உணவு பொருள் சப்ளை செய்த அனுபவம் இருந்தால் போதுமானது என்று மாற்றப்பட்டது. இதன் மூலம் முட்டை சப்ளை அனுபவம் இருந்த கிறிஸ்டியை உள்ளே கொண்டு வர வழிவகை செய்தனர். மேலும் அதுவரை பத்திற்கும் மேற்பட்ட பருப்பு மில் மற்றும் வியாபாரிகள் பங்கெடுத்து வந்தனர். ஆனால் turnover ஐ 3 கோடியில் இருந்து 40 கோடியாக மாற்றினர். மேலும் ஒரே ஒப்பந்தத்தில் 20 கோடி உணவு பொருள் சப்ளை செய்த அனுபவம் வேண்டும் என்று மாற்றினர். இந்த மாற்றங்கள் மூலம் அதுவரை போட்டி போட்டுக்கொண்டு இருந்த அனைத்து பருப்பு மில் மற்றும் வியாபாரிகளை பங்கு பெற முடியாத படி செய்தார்கள். அதுவரை சந்தை மதிப்பிற்கு கொள்முதல் செய்த ரேஷன் துறை சந்தை மதிப்பை விட ரூ 10 முதல் 30 வரை கிலோவிற்கு அதிகமாக கிறிஸ்டி நிறுவனமிடமிருந்து கொள்முதல் செய்தார்கள். இதே போல் பாமாயில் டெண்டரில் 2017லும் சர்க்கரை டெண்டரில் 2019லும் டெண்டர் விதிகளை மாற்றி கிறிஸ்டி நிறுவனங்களை மட்டும் போட்டி போடும் வண்ணம் மாற்றியது ரேஷன் துறை.