Get Mystery Box with random crypto!

Corona நிவாரண பொருட்கள் கொடுக்கும் திட்டத்திற்கு விடப்பட்ட டெண | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

Corona நிவாரண பொருட்கள் கொடுக்கும் திட்டத்திற்கு விடப்பட்ட டெண்டரில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து நேற்று அறப்போர் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் இன்று காலை அந்த டெண்டர் விதிகளில் மாற்றங்கள் செய்து அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது. இனி விடப்படும் மற்ற அனைத்து டெண்டர்களிலும் இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்படுமானால் ரேஷன் துறையில் அனைத்து டெண்டர்களையும் Christy நிறுவனம் மட்டுமே எடுக்கும் நிலை மாற அதிக வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் குறிப்பிட்ட இந்த Corona நிவாரண பொருட்கள் டெண்டர் கிட்டதட்ட 670 கோடி மதிப்புள்ளது. குறைந்தபட்சம் 20% பொருட்கள் சப்ளை செய்யக்கூடிய நிறுவனம் என்றாலே அவர்கள் 134 கோடிக்கு பொருட்கள் சப்ளை செய்ய வேண்டும். இத்தனை பெரிய தொகைக்கு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் தமிழகத்தில் இல்லை. மேலும் இந்த டெண்டர் விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20 மே என்பதால் இருக்கும் நேரமும் குறைவு. ஆகவே மீண்டும் Christy நிறுவனங்கள் தான் இந்த டெண்டரை எடுக்கும் நிலை வரும். அப்படி நடந்தால் இன்று டெண்டரில் செய்த மாற்றங்கள் எதுவும் எந்த நல்ல பயனையும் தராது. அமுதம் அங்காடியில் குறிப்பிட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு Christy நிறுவனம் டெண்டர் எடுப்பதை தடுக்க முடியாது. மேலும் பொருட்களின் மாதிரியை நேரில் வந்து கொடுக்க வேண்டும் என்ற விதி Christy நிறுவனத்திற்கு சாதகமாக உணவுத்துறையில் செயல்படும் அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தப்பட்டு டெண்டர் கொடுக்கும் மற்ற நிறுவனங்களை தடுக்க உதவும். E Tender கொடுப்பதன் பயனும் நிறைவேறாது.

ஆகவே இந்த டெண்டர்களை மாவட்டவாரியாக பிரித்து மாவட்டத்திற்கு 5 நிறுவனங்களுக்கு தர வேண்டும். அப்படி செய்வதன் மூலம் 190 சிறு நிறுவனங்கள் தமிழகத்தில் பயன் பெறும். டெண்டர் விண்ணப்பிக்கும் நேரத்தையும் மேலும் 4 நாட்கள் நீட்டித்து உத்தரவிட வேண்டும். இதை செய்வதன் மூலம் இது வரை தமிழக ரேஷன் துறையில் டெண்டர்களை செட்டிங் செய்து அனைத்து டெண்டர்களையும் சந்தை விலையை விட அதிக விலைக்கு எடுத்து தமிழக அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுத்தி வந்த மாபியாக்களுக்கு முடிவு கட்ட முடியும். இது குறித்து அறப்போர் இயக்கம் தமிழக அரசுக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.