Get Mystery Box with random crypto!

கீழ்கட்டளை ஏரியை பல்லாவரம் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இர | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

கீழ்கட்டளை ஏரியை பல்லாவரம் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இருவரும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை அடுத்து பல்லாவரம் நகராட்சி நாங்களே இதை சீரமைக்கிறோம் என்று பணியை துவங்கியது. ஆனால் 2016ம் ஆண்டு முதல் ஏரியை சீரமைப்பதற்கு பதிலாக வருவாய்துறையின் துணையோடு அதை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்து ஏரியின் எல்லையை சுருக்கி வேலி அமைத்தது பல்லாவரம் நகராட்சி.

இதை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக அறப்போர் இயக்கம் பல புகார்களை தொடர்ந்து கொடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் உண்மையான எல்லையை குறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. கடந்த வருடம் ஏரியை ஆய்வு செய்த pwd அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் மேலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க துவங்கின. மீண்டும் மீண்டும் அறப்போர் இயக்கம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக தற்பொழுது ஏரியின் எல்லைகள் pwd அதிகாரிகள் மூலம் குறிக்கப்பட்டுள்ளன. இந்த படங்களில் பார்ப்பது போல பல இடங்களில் ஏரி உள்ளே மண் அடித்து சமப்படுத்தி சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். concrete கம்பங்கள் அடித்து முள் வெளி கட்டியுள்ளனர். சிலர் ஆக்கிரமித்த இடங்களில் தற்காலிக கட்டிடங்களையும் கட்டியுள்ளனர்.

கிட்டத்தட்ட சுமார் 10 ஏக்கர் ஏரி நிலம் பல்லாவரம் நகராட்சியின் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 200 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது ஏரி எல்லை குறிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதிகள் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்காமல் இருக்க உடனடியாக அந்த பகுதியில் கொட்டப்பட்ட மணலை அகற்றி தண்ணீர் தேங்கும் படியான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.